Tuesday, June 16, 2009

யார் குற்றம்? - 1

"டேய், நீயாச்சும் நாலு எழுத்து படிச்சி எதோ ஒரு கவர்மென்ட் உத்தியோகத்துக்கு போகமாட்டியான்னு நினைச்சிகிட்டு இருக்கேன்" என்று பலர் கூற நான் பார்த்திருக்கின்றேன்.

கல்வியின் முக்கியத்துவம் பணம்தான் என்றில்லை! அறியாமையை அகற்றி, இந்தப் பேரண்டமே போற்றுமளவுக்கு பேரும் புகழும் நமக்கு கொடுப்பது அவன் பயின்ற கல்விதான்.

இங்கிலாந்துக்கு நம் முன்னோர்கள் அடிமையாயிருந்த போதிலிருந்து, இன்று வரை கல்விக்கு அளவுகோல் வைத்து, அது இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பல தலைவர்கள், தலைமுறையினர்கள் கல்வித் திட்டங்களில் பல மாறுதல்களை கொடுத்துவிட்டு காலம் சென்றுவிட்டனர்.

பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள்தான், பாடத்திட்டங்களை சிறந்த முறையில் மாற்றி அமைத்தார். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வுகளை நடத்தும் முறையைப் புகுத்தினார்.

இப்படி கல்விக் கதைகள் ஏராளமாக இருக்கின்ற இத்தமிழகத்தில் இன்று கல்வியை விலை பேசி ஏலம் விடும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.


ஒரு மாணவன் 5ம் வகுப்பு படித்து 6ம் வகுப்புக்கு அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு மாற வேண்டும். அவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க, அதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ 100 பெற்றிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வசூல் அங்கு படித்த அனைத்து மாணவர்களுக்கும்தான்.

அந்த மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு பழைய மாணவன், மாற்றுச்சான்றிதழ் பெற ரூ 250 கேட்கின்றார்கள். சான்றிதழ் உடனே கிடைக்க ரூ 500 கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இப்படி வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. அப்படி கொடுத்திருந்தால், நாம் நேரடியாக அரசாங்கத்தால் கொடுமைப் படுத்தப் படுகிறோம் என்பது தெளிவாகும்.

இவைகள் எல்லாம் அரசுப் பள்ளிகள், இதுதான் இங்கே விசேஷமான செய்தி!

இப்போது அரசுப் பள்ளிகளிலும் கூட, ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க ஆரம்பித்து விட்டனர். செய்முறைத் தேர்வில் 50 மதிப்பெண் பெற வேண்டுமென்றால், அவரிடம் அந்த மாணவன் டியூஷன் படித்துதான் ஆக வேண்டி இருக்கின்றது.

அரசுப் பள்ளிகளும், அங்கே பணிபுரிகின்ற அலுவலர்களும், ஆசிரியர்களும், இப்படி செய்ய ஆரம்பித்தால், தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் பணம் கேட்கும் அவலம் தொடரத்தான் செய்யும்.

இன்று படித்த ஒரு செய்தி,

"நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, தனியார் பள்ளிக் கூடங்களைப் போலவே மாணவிகளிடம் விதம் விதமான சீருடைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் நிதிச் சுமையை ஏற்றி வருவதாக மக்கள் குமுறுகின்றனர்."

இப்படி எல்லா இடங்களிலும் கொடுமைகள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுவார்கள். அப்படிப் பட்ட இளம் வயதில், எந்த இடத்தில் ஒரு மனிதனை மாணவனாக்கி, அவனுக்கு கல்வியையும், வாழ்க்கையையும், அவன்தான் எதிர்காலத்தின் இரும்புத் தூண் என்றும் கூறி உருவாக்குகின்றார்களோ, அங்கே லஞ்சம் வாங்கவும் இன்று கற்றுக் கொடுப்பதுதான் என்னுடைய வேதனை.

இதில், வாங்கும் அரசு அலுவலர்கள் குற்றவாளிகளா? அவர்கள் கேட்டாலும் கொடுப்பவர்கள் குற்றவாளிகளா? இவைகள் எல்லாம் நடக்கின்றன என்ற என்னற்ற பத்திரிகை செய்திகள், மற்றும் கோரிக்கை மனுக்களைப் பார்த்தும் அலட்சியமாய் இருக்கும் அரசு அதிகாரிகள் குற்றமா? அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள் குற்றமா?

யார் குற்றம்??

...தொடரும்

1 comments:

Sathia said...

மக்கா,

எம்ஜியாரும் இன்றைய அழிவு நிலைக்கு காரணம்.மெட்ரிகுலேஷன் பள்ளிய அறிமுகப்படுத்தினதுல அவருக்கும் பங்கிருக்கு. அவருக்கு அடிப்பொடியா இருந்தவர் இப்போ கல்வித்தந்தையா ஆனதெல்லாம் வரலாறு.

என்னோட பதிவு ஒண்ணுல நீண்ட விவாதம் நடந்தது. பார்க்க http://msathia.blogspot.com/2007/10/tamil-education-system-boards-questions.html